உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு 2024 டி20 உலகக் கோப்பை. வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் பிரமாண்டமாக தொடங்கிறது. கிரிக்கெட் பல நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், பிரபலமே ஆகாத அமெரிக்காவில் ஏன் இவ்வளவு பெரிய கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கான பதில்கள் இங்கே!
கடந்த 2021 ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் என்று அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸில் ஏற்கனவே கிரிக்கெட்டில் நன்கு அறியப்பட்ட பெயர் என்றாலும், அமெரிக்கா ஏன் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டே இருந்தது. அமெரிக்கா என்று அறிவிக்கப்பட்ட உடனே, கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவிற்குள் உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள் அடுத்தடுத்து அதிவேகமாக கட்டப்பட்டுள்ளன.
ஒரு பரிசோதனை முயற்சி:
அமெரிக்காவில் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், ஸ்டேடியத்தில் உள்ள இருக்கைகளை நிரப்புவது என ஸ்டேடியம் நிர்வாகத்திற்கு மிகவும் சிக்கலான பணியாக இருக்கும். குறிப்பாக சிறிய அணிகளின் போட்டிகளில் எப்படி கூட்டம் கூடும் என்ற கேள்வியும் எழும். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட, அமெரிக்காவில் மட்டும் 16 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இறுதிப் போட்டி வரை 55 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 16 போட்டிகள் அமெரிக்காவிலும், மீதமுள்ள 39 போட்டிகள் கிரிக்கெட் ஏற்கனவே புகழ்பெற்ற வெஸ்ட் இண்டீஸிகளிலும் நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்:
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் கொண்டுவரப்படும் என்று சில காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வருவதற்கும், 2024 டி20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் நடத்துவதற்கும் என்ன சம்பந்தம்? 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது என்றும் அதுவரை கிரிக்கெட் விளையாட்டை அமெரிக்காவிற்குள் ஊக்குவிக்க ஐசிசி அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
பிரேலில், அர்ஜெண்டினாவிற்கு கிரிக்கெட்டை கொண்டு செல்ல திட்டம்..?
இந்தியாவில் விளையாடிய கில்லியை பார்த்து உருவானாலும், கிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்து ஆகும். இதன் காரணமாக, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக வலம் வர தொடங்கியது. இதையடுத்து இன்று ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்திலும் கிரிக்கெட் மிகவும் பிரபலமாகிவிட்டது. ஆனால் கிரிக்கெட் இன்னும் மேற்கத்திய நாடுகளில் கால்பந்து அளவிற்கு பிரபலம் ஆகவில்லை. அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவை ஒரு துருப்பு சீட்டாய் பயன்படுத்தி வெற்றி கண்டால், அதனை தொடர்ந்து மெக்சிகோ, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளும் கிரிக்கெட்டை கொண்டு செல்லலாம் என்று நம்பப்படுகிறது.
டி20 உலகக் கோப்பைக்காக அமெரிக்காவில் 3 ஸ்டேடியங்கள் தேர்வு:
2024 டி20 உலகக் கோப்பைக்காக ஒட்டுமொத்தமாக 9 ஸ்டேடியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 ஸ்டேடியங்கள் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளிலும், மீதமுள்ள 3 ஸ்டேடியங்கள் அமெரிக்காவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியம் (நியூயார்க்), சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் (புளோரிடா) மற்றும் கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம் (டெக்சாஸ்) ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியின் முதல் போட்டி ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையே டெக்சாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அயர்லாந்துக்கு எதிராக வருகின்ற ஜூன் 5ம் தேதி களமிறங்குகிறது.