டி20 உலகக் கோப்பையின் 10வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான இந்த போட்டி பார்படாஸ் ஜென்சிங்டன் ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அனி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றிருந்தாலும், ஓமன் கேப்டன் ஆகிப் இலியாஸ் பிடித்த கேட்சினால் அனைவரின் மனதையும் கவர்ந்தார். மேலும், ஓமன் கேப்டன் ஆக்கிப் இலியாஸ் பிடித்த இந்த கேட்ச் டி20 உலகக் கோப்பை 2024ல் ’சிறந்த கேட்ச்’ அல்லது ’கேட்ச் ஆப் தி டோர்னமெண்ட்’ விருது பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவிற்கு சிறந்த கேட்சாக அமைந்தது.
ஓமன் கேப்டன் இலியாஸ் பிடித்த இந்த கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது தவிர இந்த கேட்ச் வீடியோவை ஐசிசியும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், கடந்த 2016ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஓமன் அணியின் முன்னாள் கேப்டன் ஜீஷன் மக்சூத் பிடித்த கேட்சும், தற்போதைய கேப்டன் இலியாஸ் பிடித்த கேட்சும் ஒன்றாக இணைக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்யவந்து, தான் சந்தித்த முதல் பந்தை ஆப் சைடு நோக்கி அடித்தார். அப்போது ஆகிப் இலியாஸ் லாங் ஜம்ப் செய்து அந்தை கேட்சை பிடித்து அசத்தினார். இந்த வீடியோவே தற்போது படுவைரலாகி வருகிறது.
போட்டி சுருக்கம்:
பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச முடிவு செய்து ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதுவே, ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 67 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இலக்கை துரத்திய ஓமன் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.