IND vs AUS Records: இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் குவிக்கப்பட்ட பல்வேறு சாதனைகள்.. அதில் ரோஹித் மட்டும் இத்தனையா..?
IND vs AUS Records: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. அவை என்ன சாதனைகள் என்று இங்கே பார்க்கலாம்..
Continues below advertisement

இந்திய கிரிக்கெட் அணி ( Image Source : Jay Shah/twitter )
IND vs AUS Records: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. அவை என்ன சாதனைகள் என்று இங்கே பார்க்கலாம்..
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் குவிக்கப்பட்ட சாதனைகள்:
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் 24 சிக்சர்களை அடித்தனர். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது இந்தப் போட்டி. இந்தப் பட்டியலில் அயர்லாந்து-நெதர்லாந்து போட்டி முதலிடத்தில் உள்ளது. 2014 டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து-நெதர்லாந்து இடையேயான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் 30 சிக்சர்களை அடித்தனர்.
- கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற சாதனை ரோஹித் சர்மாவின் பெயரில் பதிவாகியுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 60 டி20 போட்டிகளில் விளையாடி 48ல் வெற்றி பெற்றுள்ளது.
- இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 போட்டிகளில் தொடர்ந்து 10வது வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும், நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 12 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த டி20 உலகக் கோப்பையில், இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி தனது வெற்றி பாதையை தொடங்கியது. இதன் பிறகு இந்திய அணி பாகிஸ்தான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
- சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 4,165 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். பாபர் அசாம் இந்த பட்டியலில் 4,145 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 92 ரன்கள் எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மா, டி20 உலகக் கோப்பையில் இந்திய கேப்டனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக, 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த விராட் கோலி 57 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் 98 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- டி20 உலகக் கோப்பையில் ஒரு அணிக்கு எதிரான போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரோஹித் சர்மா. நேற்றைய போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்திருந்தார். முன்னதாக, 2007 டி20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
- டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த உலகின் முதல் பேட்டர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். இந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 173 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- அனைத்து சர்வதேச போட்டிகளிலும் எதிரணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பதிவு செய்தார். ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்த்து 132 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்து எதிராக 130 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 19,000 ரன்களை கடந்த 4வது இந்தியர் என்ற சாதனை படைத்தார் ரோஹித் சர்மா. இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், கோலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.
- ரோஹித் சர்மா அடித்த 92 ரன்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்களின் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 101 ரன்கள் குவித்து டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே ஆகும்.
Continues below advertisement
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.