சவுரப் நேத்ரவால்கர் என்ற பெயர் கடந்த சில நாட்களாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் உலாவி வருகிறது. இந்த அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர் 2024 டி20 உலகக் கோப்பையில் தனது பந்துவீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த சவுரப், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டையும் கைப்பற்று அசத்தினார். இந்தநிலையில், சவுரப் பற்றி மக்கள் கவனத்தை ஈர்த்த விஷயம் என்னவென்றால், கிரிக்கெட் விளையாடுவதோடு, ஆரக்கிளில் முழு நேரமும் பணியாற்றுகிறார்.
வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உலகக் கோப்பையில் விளையாடி வருகிறார். இருப்பினும், விடுமுறை நாட்களில் கூட சவுரப் தனது லேப்டாப்பை வைத்திருப்பதாகவும், ஓய்வு நேரத்தில் அவர் வேலை செய்வதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. போட்டியின் நேரம்போக, ஹோட்டலில் இருந்து WFH முறையில் வேலை பார்த்து வருகிறார்.
அமெரிக்காவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், அமெரிக்கா சூப்பர்-8 ஐ எட்டியது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. அதாவது அமெரிக்காவுக்கு மொத்தம் ஐந்து புள்ளிகள் கிடைத்தன. இந்தியா ஏற்கனவே 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றுள்ளது. குழுவில் உள்ள மற்ற அணிகள் இனி அமெரிக்காவுடன் இணைய முடியாது, எனவே அமெரிக்காவின் தகுதி உறுதிப்படுத்தப்பட்டது.
விடுப்பு நாளை அதிகரிக்க மெயில் போட இருக்கும் சவுரப்:
இந்தநிலையில், ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியாவின் சவுரப் நெட்ரவால்கர், அமெரிக்காவிற்காக உலகக்கோப்பையில் விளையாட ஜூன் 17 ஆம் தேதி வரை மட்டுமே விடுமுறை வாங்கியிருந்தார். தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறிவிட்டதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு விடுமுறை கேட்டு, விண்ணப்பிக்க இருக்கிறார் நெட்ரவால்கர்.
பெருமிதம் கொண்ட அமெரிக்க கிரிக்கெட்:
'வரலாறு படைக்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு முதல்முறையாக அமெரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது. வாழ்த்துகள்.' என ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க கிரிக்கெட் வாரியம் பதிவிட்டிருந்தது.
டி20 உலகக் கோப்பை 2024ல் அமெரிக்க அணியின் செயல்திறன்:
நடப்பு டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணி முதல் கனடா அணியை வீழ்த்தி போட்டியை கோலாகலமாக தொடங்கினர். முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, அமெரிக்க அணி இரண்டாவது லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதேசமயம், பலம் கொண்ட இந்திய அணியிடம் அமெரிக்க அணி தோல்வியை சந்தித்தது. பின்னர், அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக, முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றதே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றதற்கு முக்கிய காரணம். இப்போது வெஸ்ட் இண்டீசில் நடக்கும் சூப்பர்-8 போட்டியில் அமெரிக்க அணி விளையாட இருக்கிறது.