ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதன்மை சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதன்மை சுற்றில் ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் மோதின.


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சகப்வா முதல் ஓவரிலே டக் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய மாதவரே அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனால், அவர் 22 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலே கேப்டன் எர்வின் 9 ரன்களில் அவுட்டானார். 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்து ஜிம்பாப்வே தடுமாறியது.




அப்போது, களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா அதிரடியாக ஆடினார். அவரது அதிரடியால் ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவருக்கு மறுமுனையில் எந்தவொரு வீரரும் பெரிதளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மில்டன் சும்பா 16 ரன்களிலும், ரியான் பர்ல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.


அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ராசா அரைசதம் அடித்து அசத்தினார். சிறப்பாக ஆடிய சிக்கந்தர் ராசா கடைசி ஓவரின் கடைசி பந்தில் போல்டானார். அவர் 48 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசினார். இதனால், ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை விளாசியது.


175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலே பால் ஸ்டிர்லிங் டக் அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டக்கர் 11 ரன்களிலும், ஹாரி டெக்டர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கேப்டன் பால்பிரைனி 3 ரன்களில் ஆட்டமிழக்க, 22 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை அயர்லாந்து இழந்தது.




இதையடுத்து, களமிறங்கிய கேம்பரும், ஜார்ஜ் டோக்ரெலும் ஓரளவு ரன்களை சேர்த்தனர். கேம்பர் 27 ரன்களிலும், டோக்ரெல் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த டேலனி 24 ரன்களிலும் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மெக்கர்த்தி 16 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், அயர்லாந்து அணியை ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


ஜிம்பாப்வே அணி தரப்பில் முசராபானி 3 விக்கெட்டுகளையும், சதாராவும், நிகர்வாவும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியால் ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.