இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் அக்டோபர் 30ம் தேதி (இன்று) பெர்த் மைதானத்தில் மோத இருக்கின்றனர். 


ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்திய பின்னர், இந்திய அணி 1.425 என்ற கண்ணியமான நிகர ரன் விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 


இந்தநிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியில் எந்த வீரர் எதிரணிக்கு ஆபத்தாக இருப்பார் என்பது குறித்து இங்கே காணலாம். 


விராட் கோலி (இந்தியா)


தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இந்தியாவுக்காக சிறந்த பேட்ஸ்மேன்னாக இருந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 ரன்களுடனும், நெதர்லாந்து அணிக்கு எதிராக 62 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இரு போட்டிகளிலும் 148.45 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய கோலி, இந்த தொடரில் இன்னும் ஆட்டமிழக்கவில்லை. டி20 உலகக் கோப்பைகளில் கோலி சராசரி கிட்டதட்ட 90 ஆக இருந்து வருகிறார். அதேபோல், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். இந்த போட்டியிலும் விராட் கோலி பார்மை தொடர்ந்தால் இந்திய அணி இன்றைய போட்டியில் நிச்சயம் வெல்லும். 


ரோசோவ் (தென் ஆப்பிரிக்கா)


கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் அற்புதமான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில், பிரான்சின் குஸ்டாவ் மெக்கியோனுக்குப் பிறகு, டி20 போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். அவர் அடித்த இரண்டு சதங்களில் ஒன்று இந்தியாவுக்கு எதிராக இருந்தது. வாண்டர் டுசென் தென்னாப்பிரிக்கா அணியில் இல்லாத குறையை ரிலீ ரோசோவ் தற்போது தீர்த்து வருகிறார். 


சூர்யகுமார் யாதவ் (இந்தியா)


சமீபகாலமாக டி20 போட்டிகளில் மிகவும் ஆபத்தாக இருந்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். அறிமுகமான ஓராண்டு காலத்தில் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த ரன்களில் சூர்யகுமார் யாதவ் வெளியேறினாலும், நெதர்லாந்து அணிக்கு எதிராக அதிரடி விளையாடி அரைசதம் கடந்தார். அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் தற்போது சிறப்பாக விளையாடியும் வருகிறார். இன்றைய போட்டியில் சூர்யகுமார் மிரட்டினால் நிச்சயம் இந்திய அணியின் ஸ்கோர் எகிறும்.


ஹெட் டூ ஹெட் :


சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரையில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளது. அதில், இந்தியா 13 முறையும், தென்னாப்பிரிக்கா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. 


அதேபோல், உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளது. அதிலும் இந்தியா 4 முறையும், தென்னாப்பிரிக்கா ஒரே ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளது. 


கணிக்கப்பட்ட இந்திய அணி:


கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்),  விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், முகமது ஷமி,  புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்


கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி:


 குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்),  டெம்பா பவுமா(கேப்டன்),  ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர்,  டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல்/மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கிங்கிடி,ரபாடா