கடந்தாண்டு நடைபெற வேண்டிய உலககோப்பை டி20 தொடர் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பாண்டில் நடைபெற்றது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், அடுத்த உலககோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு உலககோப்பை டி20 போட்டிகள் நடைபெற உள்ள மைதானத்தை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்தாண்டு அக்டோபர் 16-ந் தேதி உலககோப்பை டி20 போட்டித் தொடங்க உள்ளது. இந்த தொடர் நவம்பர் மாதம் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த உலககோப்பைத் தொடரில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட், பிரிஸ்பேன், கிலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னியில் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதிப் போட்டி 2022ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 10-ந் தேதி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி மிகவும் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் அடுத்தாண்டு நவம்பர் 13-ந் தேதி நடைபெற உள்ளது.” இவ்வாறு ஐ.சி.சி. அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலககோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து, அரையிறுதியில் வெளியேறிய இங்கிலாந்து, பாகிஸ்தான், சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்தியா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். பிற அணிகள் தகுதி ஆட்டங்கள் மூலமாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்