ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த உலககோப்பையில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும், இந்த தொடரில் பங்கேற்ற அணிகளிலே பாகிஸ்தான் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்ட தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை முன்னேறுவதற்கு முக்கிய காரணங்களில் அந்த அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும் ஒருவர் ஆவார். ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதிப் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ.)வில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து முகமது ரிஸ்வான் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,“ நான் மருத்துவமனையை அடைந்தபோது, நான் சுவாசிக்கவில்லை. செவிலியர்கள் எனது மூச்சுக்குழாய் மூச்சுத்திணறிவிட்டது என்று கூறியுள்ளனர். அவர்கள் என்னிடம் எதுவும் கூறவில்லை. காலையில் சரியாகிவிடும். காலையில் டிஸ்சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளனர். ஆனால், மதியவேளையின்போது நான் மாலையே என்னை டிஸ்சார்ஜ் செய்யும் என்று கூறினேன்.
அப்போதுதான், ஒரு செவிலியர் மருத்துவமனைக்கு வருவதற்கு 20 நிமிடங்கள் தாமதமாகியிருந்தால் உங்களுடைய இரண்டு மூச்சுக்குழாய்களும் வெடித்திருக்கும். நீங்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று இரவுகள் மருத்துவமனையிலே தங்க வேண்டும் என்று கூறினார்.
அவர்கள் என்னை தொடர்ந்து பல பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஆனால், என்னுடைய மனம் முழுவதும் விரைவில் குணம் அடைந்து விளையாட செல்ல வேண்டும் என்பதிலேதான் இருந்தது. அப்போது மருத்துவர் என்னிடம் நீங்கள் பாகிஸ்தானுக்காக அரையிறுதியில் ஆட வேண்டும் என்றார். அது எனக்கு உத்வேகத்தை அளித்தது. ஆனால், சிறிது நேரம் கழித்து மருத்துவர், ரிஸ்வான் நீங்கள் விளையாடும் நிலையில் இல்லை என்றார். அதையும் மீறி விளையாடுவது ஆபத்து என்றார். அதிர்ஷ்டவசமாக நான் விரைவாக குணமடைந்துவிட்டேன். முகமது ரிஸ்வானுக்கு சிகிச்சை அளித்தது ஒரு இந்திய மருத்துவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் அணிக்காக 52 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 67 ரன்களை குவித்தார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 176 ரன்களை குவித்தது. ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அதிரடியால் ஆஸ்திரேலியா அந்த போட்டியில் வென்றது. பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய வீரரான முகமது ரிஸ்வான் 49 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 11 அரைசதங்களுடன் 1,346 ரன்களையும், 41 ஒருநாள் போட்டிகளில் 2 சதம், 4 அரைசதங்களுடன் 864 ரன்களையும், 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 6 அரைசதங்களுடன் 914 ரன்களையும் குவித்துள்ளார்.