நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. கடந்த 2009 இறுதிப்போட்டியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி கிட்டதட்ட 13 ஆண்டுக்கு பிறகு, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது. 






டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றுகளில் தோல்வியை சந்தித்தது. இதனால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கே தகுதி பெறுமா..? என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து,  தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதன் மூலம் இந்தியா அணியின் அரையிறுதி கதவு திறந்தது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, குரூப் பி பிரிவில் இந்தியாவை தொடர்ந்து இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அணி அரையிறுதியை எட்டியது. 


இந்தியா - பாகிஸ்தான் :


2007 ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியும்,  இந்திய அணியும் மோதியது. அன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 


நாளை நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வருகிற ஞாயிற்றுகிழமை பாகிஸ்தான் அணியுடன் மோதும்.  இங்கிலாந்து இடையிலான நாளைய போட்டியில் இந்தியா அணி வெற்றிபெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் சந்திக்கும். (சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடியது. ) இதில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 


13 ஆண்டுகளுக்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் தனது முதல் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. மேலும், பாகிஸ்தான் அணி இதுவரை 2007, 2009 மற்றும் 2022 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இலங்கை அணி மூன்று முறை டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது.