தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு செல்ல உள்ளது. தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து காயம் காரணமாக தீபக் ஹூடா மற்றும் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர். இதன்காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தீபக் ஹூடாவின் காயம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அந்தக் காயம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியுடன் கூடுதலாக உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை அழைத்து செல்ல இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் பும்ராவின் காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது. அவர் 4-6 வாரங்கள் வரை ஓய்வு எடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் விரைவில் குணமடையும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி கட்டத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


மேலும் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமி நீண்ட நாட்களாக கிரிக்கெட் களத்தில் விளையாடவில்லை என்பதால் அவரை தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் விளையாட வைக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் இணைவார் என்று கருதப்படுகிறது. இதன்காரணமாக இந்திய அணி கூடுதலாக முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரையும் ஆஸ்திரேலியா அழைத்து செல்ல உள்ளதாக தெரிகிறது. 


ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவிற்கு மாற்று வீரராக சிராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த இரண்டு டி20 போட்டிகளில் அசத்தும் பட்சத்தில் அவர் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


 






டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:


ரோகித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா,ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரீத் பும்ரா, தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் 


இவர்கள் தவிர ரிசர்வ் வீரர்களாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர். ஏற்கெனவே டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார். அனுபவ வீரர் ஜடேஜா டி20 உலகக் கோப்பையில் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் பும்ராவும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இது கருதப்படும்.