டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடர் கடந்த 16 ஆம் தேதி முதல்  ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறும். சூப்பர் 12 சுற்றில் இந்தியா அணி வரும் ஞாயிற்று கிழமை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 


 


இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை தொடர்பாக கருத்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “முதலில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஏனென்றால்  கேப்டனாக நான் களமிறங்க உள்ள முதல் உலகக் கோப்பை தொடர் இது தான். ஆகவே மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். உலகக் கோப்பை தொடர் என்றால் எப்போதும் வீரர்கள் ஆர்வமாக இருப்பார்கள். இம்முறை நாங்கள் இது குறித்து அதிகமாக பேசவில்லை. 


 


பெர்த்தில் நல்ல பயிற்சி மேற்கொண்டு இருந்திருந்தோம். ஆஸ்திரேலியாவில் ஆடுவது எப்போதும் சவாலான ஒன்று. ஒரு சில வீரர்கள் இப்போது தான் முதல் முறையாக ஆஸ்திரேலியா வருகின்றனர். எனவே அவர்கள் இங்கு இருக்கும் ஆடுகளத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக நாங்கள் விரைவாக ஆஸ்திரேலியா வந்தோம். தற்போது வீரர்கள் இங்கு இருக்கும் சூழலை உணர்ந்து கொண்டுள்ளனர். 


 






இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று நீண்ட ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆகவே எங்களுடைய நோக்கம் எல்லாம் டி20 உலகக் கோப்பையை வெல்வது தான். அதற்காக நாங்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி குறித்து நினைக்கவில்லை. ஒவ்வொரு அணிக்கும் எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்து வருகிறோம். அதை சரியாக செய்தாலே நாங்கள் நீண்ட தூரம் செல்லலாம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் எப்போதும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும். அதில் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி எங்களுக்கு  அதிகமாக இருக்கும். அதை பொருட்படுத்தாமல் வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தில் கவனத்தை செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


 


இந்திய அணி கடைசியாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. அதன்பின்னர் இந்தியா அணி 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிகக்கு சென்று இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு முறை கூட இந்தியா அணி இறுதிப் போட்டிகக்கு தகுதி பெறவில்லை. கடந்த முறை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. ஆகவே இம்முறை இறுதிப் போட்டிகக்கு முன்னேறி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு உடன் உள்ளனர்.