ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா, ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பைத் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா கூறியிருப்பது ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமோ எந்தவொரு ஆலோசனையும் இன்றி கூறப்பட்டது ஆகும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அவர் தலைமை தாங்கிய பிறகு, ஏசிசி குழு உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஆசிய கோப்பையை மாற்றுவது பற்றிய ஜெய்ஷாவின் அறிக்கை ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது 1983ம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டதன் தத்துவத்திற்கு முரணானது.
இது ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும் ஆற்றலை கொண்டது. மேலும், 2023ம் ஆண்டு இந்தியா நடத்தும் ஐ.சி.சி. உலககோப்பை மற்றும் 2024 -2031ம் ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானின் வருகையை பாதிக்கும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் அறிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகார தகவலையும், தெளிவுப்படுத்தலையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெறவில்லை. இந்த முக்கியமான விஷயம் குறித்து விவாதிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை கேட்டுக்கொண்டுள்ளது. “
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : IND vs PAK: நீங்க வரலை என்றால் நாங்களும் வரமாட்டோம்.. இந்தியாவை எச்சரிக்கிறதா பாகிஸ்தான்? காரணம் என்ன?
மேலும் படிக்க : Asia Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்...!