டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இன்னும் இந்திய அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்பது உறுதியாகவில்லை. 




இந்நிலையில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்யலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஐசிசி ரிவ்யூவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ரிஷப் பண்ட் நிச்சயம் இந்திய அணியில் களமிறங்க வேண்டும். அவருடைய ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் பேட்டிங் ஸ்டைல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது அவர் அணிக்கு நிச்சயம் கூடுதல் பலம் சேர்ப்பார். 


 






மேலும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சேர்ந்து விளையாடினாலும் அது சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால் தினேஷ் கார்த்திக் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிசர் ஆகிய அனைத்து இடங்களிலும் விளையாடும் திறமை கொண்டவர். சமீப காலங்களாக அவர் சிறப்பான ஃபினிசராக வலம் வருகிறார். ஆகவே இந்த இருவரும் சேர்ந்து அணியில் இடம்பெற்றால் அது அணிக்கு கூடுதல் பலம் தான்” எனத் தெரிவித்துள்ளார்.


ஏற்கெனவே ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்த இருவரும் அணியில் இடம்பிடித்து விளையாடினால் அது நல்ல பயிற்சியாக அமையும் என்று அனைவரும் கருதுகின்றனர். ஆகவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களில் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. 




முன்னதாக இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்,“ நீங்கள் தினேஷ் கார்த்திக்கையும், ரிஷப்பண்டையும் ஆடும் லெவனில் ஒன்றாக களமிறக்க முடியாது. அவ்வாறு செய்தால் ஆறாவது பந்துவீச்சாளரை இழக்க நேரிடும். உலககோப்பையில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க முடியாது. உங்களுக்கு பந்துவீச்சில் பக்கபலம் தேவை. சூர்யகுமார் யாதவ் அல்லது கே.எல்.ராகுல் மோசமாக ஆடினால் நீங்கள் ரிஷப்பண்டை தொடக்க வீரராக களமிறக்கலாம். இவர்கள் இருவரையும் மிடில் ஆர்டர் வீரர்களாக நான் பார்க்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார். 


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் சர்வதேச டி20 போட்டிகளில் அந்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. இவர் தற்போது வரை 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 934 ரன்கள் அடித்துள்ளார். மேலும் இவருடைய சராசரி 23.94ஆக உள்ளது. இதன்காரணமாக ரிஷப் பண்ட் டி20 ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.