டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு சூப்பர் 12 போட்டியிலும் தோல்வி அடைந்தனர். இதனால் முதல் வெற்றியை தேடி இரு அணிகளும் களமிறங்கின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில்(4) மற்றும் லூயிஸ்(6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் ரோஸ்டன் சேஸ்(39) மற்றும் நிகோலஸ் பூரண் 40 ஆகியோர் மட்டும் ரன்கள் அடித்தனர். இறுதியாக களமிறங்கிய ஹோல்டர் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன்(9) ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நயிம் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். சௌமியா சர்கார் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதனால் பங்களாதேஷ் அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்தது. சௌமியா சர்கார் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த முஸ்ஃபிகூர் ரஹிம் 8 ரன்களில் ரவிராம்பால் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்பு வந்த கேப்டன் மஹமதுல்லா- லிட்டன் தாஸ் உடன் ஜோடி சேர்ந்து பங்களாதேஷ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பங்களாதேஷ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது.
இந்தச் சூழலில் 19ஆவது ஓவரில் பிராவோவின் பந்தில் லிட்டன் தாஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 6 பந்துகளில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் கடைசி ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸல் வீசினார். அந்த ஓவரில் மஹமதுல்லா கொடுத்த கேட்சை ஃபிளேட்சர் தவறவிட்டார். எனினும் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் போராடி வெற்றி பெற்றது. அத்துடன் நடப்பு தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்கவைத்தது. 3 சூப்பர் 12 போட்டிகளில் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
மேலும் படிக்க: ரொனால்டோ பாணியில் கோகோ-கோலாவை ஓரங்கட்டிய வார்னர் -வைரல் வீடியோ உள்ளே...!