ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெற்று வரும் உலககோப்பை டி20 போட்டியில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேச அணி இன்று இலங்கையுடன் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வங்காளதேச தொடக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடினார். அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் அனுப்பினர். இலங்கை அணிக்காக நான்காவதாக பந்துவீசிய லஹிரு குமாரா மிகவும் ஆவேசமாக காணப்பட்டார்.
லஹிரு குமாராவின் முதல் ஓவரில் முகமது நைம் பவுண்டரி விளாசினார். அவர் பவுண்டரி விளாசிய அடுத்த பந்தில் லஹிரு வீசிய பந்தை முகமது நைம் நேராக அடித்தார். அந்த பந்தை அப்படியே பிடித்த லஹிரு ஆவேசமாக அவருக்கு நேராக எறிந்தார். அதிர்ஷ்டவசமாக முகமது நைம் மீது பந்துபடவில்லை.
பின்னர், லஹிரு குமாரா வீசிய இரண்டாவது ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை ஷனகா அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால், வங்காளதேசம் தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த லிட்டன் தாஸிடம், அவரை அவுட்டாக்கிய லஹிரு குமாரா வெறுப்பேற்றும் விதமாக அவரது முகத்திற்கு நேராக ஏதோ வார்த்தைகளை கூறினார்.
இதனால், கோபமடைந்த லிட்டன் தாஸ் லஹிரு குமாராவிடம் தனது பேட்டை நீட்டி எச்சரிக்கும் விதமாக ஏதோ பதில் வார்த்தைகளை கூறினார். இதனால், கோபமடைந்த லஹிரு குமாரா, லிட்டன் தாஸிடம் சண்டைக்கு சென்றார். நல்லவிதமாக அதற்குள் சக வீரர்களும், கள நடுவர்களும் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர். லிட்டன்தாஸும் பெவிலியன் திரும்பினார்.
வங்காளதேச வீரர்கள் வழக்கமாக களத்தில் இதுபோன்று எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவர்களை சீண்டுவதையும் கடந்த சில வருடங்களாக வைத்திருப்பவர்கள். ஆனால், சங்கக்கரா, ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய இலங்கை அணி எப்போதும் ஜென்டில்மேன் ஆட்டமாகவே கிரிக்கெட்டை ஆடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால், இன்றைய போட்டியில் அமைதியாக சென்ற வங்காளதேச வீரர்களிடம் இலங்கை பந்துவீச்சாளர் லஹிரு குமாரா ஆக்ரோஷமாகவும், வம்பிழுக்கும் விதமாகவும் நடந்துகொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்