உலககோப்பை சூப்பர் 12 சுற்று நாளை அதிகாரப்பூர்வமா தொடங்க உள்ளது. இந்த நிலையில், தகுதிப்போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணியும், நெதர்லாந்து அணியும் மோதின.


டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலே அதிர்ச்சி அளிக்கும் விதமாக நெதர்லாந்தில் தொடக்க வீரர் மேக்ஸ் டவுட் 2 ரன்களில் ரன் அவுட்டானார். பின்னர், 19 ரன்களை நெதர்லாந்து அணி எடுத்திருந்த நிலையில் பென் கூப்பர் 9 ரன்னில் வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரிலே மற்றொரு தொடக்க வீரர் ஸ்டீபன் மைபர்க் ஆட்டமிழந்தார். பின்னர் காலின் அகெர்மன் இறங்கியவுடன் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடித்து 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.




இதையடுத்து, நெதர்லாந்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போலச் சரிந்தது. பாஸ் டீ லீட் ரன் ஏதுமின்றியும், விக்கெட் கீப்பர் ஸ்காட் எட்வர்ட்ஸ் 8 ரன்களிலும், வான்டெர் மெர்வ் ரன் ஏதுமின்றியும், கேப்டன் சீலர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மொத்தம் 10 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நெதர்லாந்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 44 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி இரு வீரர்கள் பிரண்டன் கிளவர், வான் மீகிரன் இருவரும் டக் அவுட்டாகினர். நெதர்லாந்து அணியில் அகெர்மன் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தார். பிற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்தனர். 4 பேர் டக் அவுட்டாகினர்.


இலங்கை அணியில் லகிரு குமாரா 3 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக்கி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்க வீரர் நிசாங்கா டக் அவுட்டானார். அடுத்து வந்த சரித் அசலங்கா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அனுபவ வீரர் குசல் பெரரா 24 பந்தில் 6 பவுண்டரிகளை அடித்து 33 ரன்களை குவித்தார். இதனால், இலங்கை அணி 7.1 ஓவர்களில் 45 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




ஏற்கனவே நெதர்லாந்து அணியை உலககோப்பை டி20 தொடரில் இலங்கை அணி 39 ரன்களில் சுருட்டியது. தற்போது மீண்டும் 44 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இலங்கை அணி குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் வங்காளதேசத்துடன் மோத உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண