உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிக்கு க்ரூப் 1 பிரிவில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் தகுதி முன்னேறியுள்ளது. இதனால், இன்று கடைசியாக நடைபெற உள்ள இந்தியா- நமீபியா ஆட்டம் எந்தவித தாக்கத்தையும் தொடரில் ஏற்படுத்தாது.




இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால், நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை வென்றிருக்க வேண்டும். ஆனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்று இந்தியாவின் கனவை கலைத்தது. இந்தியா இந்த தொடரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகிறது.






இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பாவத் ஹூசைன் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியதை தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் “ இந்தியாவிற்கு மிகப்பெரிய செய்தி. நமீபியாவிற்கு எதிரான நடைபெறும் ஆட்டத்தை மூன்று ஓவர்களுக்குள் இந்தியா முடித்துவிட்டால், அவர்கள் விமானநிலையத்திற்கு விரைவாக செல்லாம்”  என்று கேலி செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த டுவிட்டர் பதிவின்கீழ் இந்தியாவிற்கான ஆங்கில எழுத்தையும் கிண்டல் செய்யும் விதமாக INDIA என்பதற்கு பதிலாக ENDIA என்று பதிவிட்டுள்ளார். அவரது பதவிற்கு கீழ் பலரும் டுவிட் செய்துள்ளனர்.




பயிற்சி போட்டிகளில் வலுவாக வெற்றி பெற்ற இந்திய அணி குரூப் 2 பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு, 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போதே, பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் இந்திய அணியை மிகவும் கடுமையாக ட்ரோல் செய்தனர். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தோல்வியே இந்திய அணி தொடரை விட்டு வெளியேறுவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணியை கிண்டலடித்த பாக் அமைச்சருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை நடைபெற்ற உலககோப்பை தொடர்களின் வரலாற்றில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்துவது இதுவே முதல்முறை. ஆனால் 12 முறை இந்திய அணி பாகிஸ்தானை உலககோப்பையில் வீழ்த்தியுள்ளது என அவர்கள் பதிலடியும் கொடுத்துள்ளனர்.