உலககோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான இந்திய அணி நேற்று ஆடிய ஆட்டம் இந்திய அணியினர் பலரின் பார்ம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பலரும் ஏமாற்றத்தை தான் அந்த போட்டியில் அளித்தனர் என்பது உண்மை. ஐ.பி.எல். போட்டிகளில் அட்டகாசமாக விளையாடிய அசகாய சூரனாக திகழ்ந்த வீரர்கள் அனைவரும் நேற்று புஷ்வானமாகியது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி என்பதே உண்மை.


இந்திய அணி 152 ரன்கள் என்ற கவுரவமான ரன்களை இலக்காக நிர்ணயித்ததால், இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கடும் நெருக்கடி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி தோற்றது என்ற வேதனையை காட்டிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் தோல்வியை தழுவியதுதான் இந்திய ரசிகர்களை மிகுந்த ஆதங்கப்படுத்தியது.




இந்த போட்டியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனுபவம் மிகுந்த அஸ்வினுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 4 ஓவர்கள் வீசி ஒரு வைடுடன் 33 ரன்களை வாரி வழங்கினார். அவரது பந்துவீச்சை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.


சல்மான்பட் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, “ வருண் சக்கரவர்த்தி கணிக்க முடியாத மர்மமான பந்துவீச்சாளராக இருக்கலாம். ஆனால், அவர் நமக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் கூட இதுபோன்ற டேப் பால் கிரிக்கெட்டை நிறைய ஆடியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் இந்த வகை பந்துவீச்சை தெரு கிரிக்கெட்டில் வீசியிருக்கும். பந்துவீசும்போது விரல்களில் காட்டும் வித்தைகள், வித்தியாசமான முயற்சியும் எங்கே?




இலங்கையில் அஜந்தா மென்டிஸ் அவரது தொடக்க காலத்தில் பல அணிகளுக்கு அவரது மந்திர பந்துவீச்சால் குடைச்சல் அளித்தார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக அவரது சாதனை சிறப்பாக இருந்ததில்லை. பின்னர், இந்தியாவிற்கு எதிராக இலங்கை அவரை விளையாடவைக்கவில்லை. நாங்கள் ஒருபோதும் மர்மமான பந்துவீச்சை கண்டதில்லை. ஏனென்றால், நாங்கள் அந்தவகை பந்துவீச்சாளர்களுடன்தான் வளர்கிறோம்.


இந்தியா மீண்டும் வருண் சக்கரவர்த்தியை பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை மீண்டும் களமிறக்கினால் அதே ரிசல்ட்தான் கிடைக்கும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண