உலககோப்பை ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1 மற்றும் குரூப்  2 இரண்டு பிரிவுகளிலும் முக்கிய அணிகள் மோதுங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன.


ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் இதுவரை டி20 போட்டிகளில் ஒரே ஒருமுறை மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கான் அணியும் மிகவும் வலுவாகவே உள்ளது.





பாகிஸ்தான் அணி இதுவரை தாங்கள் ஆடிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியே பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியும் இதுவரை ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தற்போது பாபர் அசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது முதலே மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறது. அந்த உத்வேகத்திற்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும் விதமாக நியூசிலாந்து அணியையும்  5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு தற்போது அனைத்து துறைகளும் வலுவாகவே உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஷாகின்ஷா அப்ரீடி அபாயகரமான பந்துவீச்சாளராக உள்ளார். அவருக்கு ஹாரிஷ் ராப் மற்றும் ஹசன் அலி மிகுந்த பக்கதுணையாக வீசி வருகின்றனர். அதேபோல, சுழற்பந்துவீச்சில் இமாத்வாசிம் மற்றும் ஹைதர் அலியும் கட்டுக்கோப்பாகவும், அபாயகரமாகவும் பந்துவீசி வருகின்றனர்.




பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் அருமையான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பக்கர்ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், இமாத் வாசிம் என்று மிகப்பெரிய பேட்டிங் வரிசையே உள்ளது. பாகிஸ்தான் அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பீல்டிங்கிலும் நன்றாக தேறியுள்ளது.


அதேசமயத்தில், ஆப்கானிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியினர் பயிற்சி ஆட்டத்திலே நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவை வெளுத்து வாங்கி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. பின்னர், ஸ்காட்லாநத்துக்கு எதிராக ஓரிரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆட்டத்தில் 20 ஓவர்களில் 190 ரன்களை குவிக்க வைத்து பிரமிக்க வைத்தது. அதுமட்டுமின்றி, சேஸ் செய்ய களமிறங்கிய ஸ்காட்லாந்தை 60 ரன்களில் சுருட்டி பிரம்மாண்ட வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றை ஆப்கானிஸ்தான் தொடங்கியுள்ளது.





ஆப்கான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ஷாசாத் மற்றும் ஷாசாய் வலுவான பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கும் ஆற்றல்கள் கொண்டவர்கள். ஸ்காட்லாந்துக்கு எதிராக நஜிபுல்லா ஒரு கைதேர்ந்த வீரர் என்பதையும் நிரூபித்தார். பந்துவீச்சிலும் ஆப்கானிஸ்தான் வேகம், சுழல் என்ற இருமுனைத் தாக்குதலை நடத்த தயாராக உள்ளது. ஆப்கான் அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷீத்கான், முஜீப், கேப்டன் முகமது நபி ஆகியோருடன் வேகப்பந்துவீச்சாளரும் நவீன் உல் ஹக்கும் அசத்த காத்துள்ளனர்.


டி20 கிரிக்கெட் குறுகிய வடிவ போட்டி என்பதாலும், இன்றைய நிலவரத்திற்கு பாகிஸ்தானுக்கு இணையான பலத்துடன் ஆப்கானும் களமிறங்குவதாலும் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண