உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் பிரதான அணிகளுடன் போட்டிகளில் பங்கேற்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டிகள் நிறைவுக்கு வர உள்ளது. குரூப் பி பிரிவில் பப்புவா நியூ கினியாவை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அணி முதல் அணியாக சூப்பர் 12 சுற்றுக்கான தகுதியை உறுதி செய்தது. இந்த நிலையில், இந்த பிரிவில் இரண்டாவதாக தகுதியை உறுதி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் நாடுகள் இன்று அல் அமீரகம் மைதானத்தில் மோதின.


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஓமன் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தூணாக விளங்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜதிந்தர் சிங் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால், அந்த நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்து களமிறங்கிய காஷ்யப் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.




இதையடுத்து, மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் அகிப் இலியாஸ் மற்மு் முகமது நதீம் அதிரடியாக ஆடினர். 35 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்திருந்த அகிப் இலியாஸ் லீஸ்க் பந்தில் முன்சேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கேப்டன் ஜூசன் மக்சூத்தும் அதிரடியில் இறங்கினார். முகமது நதீம் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ஜூசனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வீரர்கள் யாரும் துணை நிற்காததால் அடுத்தடுத்து ஓமன் விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 8வது விக்கெட்டாக 30 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் ஜூசன் மக்சூத்தும் வெளியேறினார். இதனால், ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கடைசி கட்ட வீரர்கள் சந்தீப் கவுட், நஷீம்குஷி, சூரஜ்குமார், பயாஸ்பட், பிலால் கான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.




ஸ்காட்லாந்து அணி சார்பில் டவே 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷபியான் ஷரீப் மற்றும் லீஸ்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மார்க்வாட் 1 விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி ஆடி வருகிறது. இந்த வெற்றி மூலம் குரூப் பி பிரிவில் தகுதிபெற போகும் அணி யார் என்பது உறுதியாகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண