T20 WC 2022 INDvsSA: விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவதில் எங்கள் அணி ஆர்வமுடன் உள்ளோம் என தென்னாப்பிரிக்க வீரர் எய்டென் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.


டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.


முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.


இந்நிலையில், இந்திய அணி தன் 3வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. நாளை (அக்டோபர் 30 ஆம் தேதி) மாலை 4:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. நடப்பாண்டு டி-20 உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணி அதன் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன்பிறகு வங்க தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா. 


இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்பிறகு நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும் சம பலம் கொண்டதாக கருதப்பட்டாலும் நாளை30 ஆம் தேதி நடைபெறும் போட்டியிலும் தனது வெற்றியை இந்திய அணி பதிவு செய்யும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரன் கூறியதாவது, "இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலிக்கு எதிராக பந்த வீச நாங்கள் ஆர்வமாக  உள்ளோம். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்படுகிறார்கள். மேலும் விராட் கோலிக்கு எங்களுக்கும் இடையிலான போட்டி பரப்பான ஆட்டத்தை தரும்” என தெரிவித்துள்ளார்.