நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சுசி பேட்ஸ் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையை தனது பெயரில் படைத்துள்ளார். இதன்மூலம், இவ்வாறு இத்தகைய சாதனையை படைத்த முதல் வீராங்கனை என்ற சாதனை பதிவாகியுள்ளது.
கொழும்பில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் அரைசதம் அடித்தார். இந்த அரைசதம் அடித்ததன்மூலம் 10 நாடுகளில் டி20 அரைசதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை பேட்ஸ் படைத்துள்ளார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மகளிர் கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் இரண்டாவது போட்டி சமீபத்தில் கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அரைசதம் கடந்தார். சுசியின் இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் அடங்கும். இந்த அரை சதத்தின் உதவியுடன், அவர் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதன்படி, 10 நாடுகளில் டி20 அரைசதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இது டி20யில் இவரது 26வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. சுசி பேட்ஸ் இலங்கை மட்டுமின்றி இந்தியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்தில் மற்றும் நியூசிலாந்து மண்ணில் அரைசதம் அடித்துள்ளார்.
சுசி பேட்ஸ் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில்..!
நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீராங்கனையாக அறியப்படுபவர் சுசி பேட்ஸ். இவர் இதுவரை 151 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 சதங்கள் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் இவரது சிறந்த பேட்டிங் ஸ்கோர் 168.
மேலும், 145 டி20 போட்டிகளில் விளையாடி 3916 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு சதம் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும்.
போட்டி சுருக்கம்:
கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் அதிகபட்சமாக ஹசினி பெரேரா 36 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். அனுஷ்கா சஞ்சீவனி 13 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடம் 18 ரன்கள் எடுத்தார்.
பதிலுக்கு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களில் வெற்றி இலக்கை எட்டியது.