இந்திய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்டில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 


இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். டெல்லியில் நடந்த டெஸ்டின்போது முகமது சிராஜ் வீசிய பந்தில் வார்னரின் கையில் காயம் ஏற்பட்டு தற்போது தீவிரமானது. அதற்காக உரிய சிகிச்சை பெற வார்னர் ஆஸ்திரேலியா திரும்ப இருக்கிறார். 


டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி டெஸ்டின் போது வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வார்னர் இடம்பெறமாட்டார்.” என்று தெரிவித்தது. 


தொடக்க வீரர் யார்? 


வார்னர் விளையாடாத நிலையில், கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார்கள் என்பதை  ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் வருகிற டெஸ்ட் போட்டிகளில் கவாஜாவுடன் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மட்டுமே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. டெல்லி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், வார்னர் பேட்டிங் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஹெட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது. 


பார்டர்-கவாஸ்கர் தொடரில் 0-2 என பின்தங்கி உள்ள ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்டில் விளையாடாமல் இருந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ளார். இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் களமிறங்கினார் 6வது இடத்தில் பேட்டிங் செய்வார். கிரீன் இந்த வருகையால், ஆஸ்திரேலியாவுக்கு பந்துவீச்சிலும் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக நாடு திரும்பினர். அதே நேரத்தில் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த போட்டிக்கு வருகின்ற நவம்பர் 1ம் தேதி தொடங்கவுள்ளதால், இன்னும் 9 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதற்குள் பாட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. 3வது டெஸ்ட் போட்டிக்குள் கம்மின்ஸ் திரும்பவில்லை என்றால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார். 


ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன்


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத்  (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்