பே ஓவலில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசியுள்ளார். மேலும் இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
உலககோப்பை முடிவடைந்த நிலையில், இந்திய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3டி20, 3 ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியா விளையாடி வருகிறது.
வெல்லிங்டனில் நடைபெற இருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் ரத்து ஆனது.
இந்நிலையில், பே ஓவல் மைதானத்தில் இன்று இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த சதம் சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதாவின் இரண்டாவது சதமாகும்.
அத்துடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார் சூர்யகுமார் யாதவ். இந்த சதம் பதிவு செய்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் கே.எல்.ராகுலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்.
சூர்யகுமார் யாதவின் சாதனைகள்
இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். கே.எல்.ராகுலுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்களைப் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல், ஒரே காலண்டர் ஆண்டில் இரண்டு சதங்களை டி20 கிரிக்கெட்டில் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார்.
இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் ரோகித் சர்மா ஒரே காலண்டர் ஆண்டில் இரு சதங்களை விளாசியிருக்கிறார்.
நியூசிலாந்து மண்ணில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீரரும் சூர்யகுமார் யாதவ் தான்.
முதல் இன்னிங்ஸ் முடிந்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசுவது என்பது எப்போதும் ஸ்பெஷல்தான். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட வேண்டும் என்பது எனக்கு முக்கியமானதாக இருந்தது. கேப்டன் ஹார்திக் பாண்டியா என்னிடம் 18 அல்லது 19ஆவது ஓவர் வரை நிதானமாக விளையாடுமாறு தெரிவித்தார்.
16ஆவது ஓவருக்கு பிறகு அடித்து விளையாடலாம் என்று முடிவு செய்தோம். கடைசி சில ஓவர்களில் அடித்து விளையாடுவது முக்கியமாகும். வலைப் பயிற்சியில் செய்ததையே மைதானத்திலும் செய்தேன்" என்றார் சூர்யகுமார் யாதவ்.