பந்துவீச்சாளர்கள் மனதை கணித்து இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் விளையாடுகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் தெரிவித்தார்.


சூர்யகுமார் மிகச் சிறந்த வீரர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சூர்ய குமார் யாதவ் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.


குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான டி20 கிரிக்கெட்டில் அவர் எப்போதும் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.


அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்து தள்ளியுள்ளார். பாகிஸ்தானில் ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரமும், ஷோயப் அக்தரும் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் குறித்து விவாதித்தனர்.


அப்போது, பவுன்ஸ் பாலை அவர் சிறப்பாக கையாள்வது குறித்து இருவரும் சிலாகித்து பேசினர். பந்தை பின்புறமாக விரட்டுவதற்கு பயன்படுத்தும் உத்திகள் சிறப்பானவை என்றும் கூறினர். வாசிம் அக்ரம் பேசுகையில், "சூர்யகுமார் யாதவ் வித்தியாசமானவர் ஆவார். சரிதானே? அவரிடம் இருந்து வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில் சோயப் மாலிக் கூறுகையில், "ஆம். வளர்ந்துவரும் வீரர்கள் விரும்பினால் நிச்சயமாக அவர்களால் கற்றுக்கொள்ள இயலும். அவர்களுக்கு இலக்கு இருக்க வேண்டும். மேலும், அவர்கள் கடின உழைப்பை வழங்க உழைக்க வேண்டும். மிடில் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களின் மன நிலையை கணித்து விளையாட வேண்டும்" என்றார் சோயப் மாலிக்.


முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனினும், அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்களை விளாசினார்.


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 


அந்த ஆட்டத்தில் சூர்ய குமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 10 பந்துகளில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார் சூர்ய குமார் யாதவ்.






டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பிரிவில் மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தாகி உள்ளன. இதன் காரணமாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.