Rohit Sharma: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என கைப்பற்றியுள்ளது.


இந்தியா Vs இங்கிலாந்து:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, தொடரை 4-1 என கைப்பற்றியது. குறிப்பாக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடபெற்ற தொடரின் கடைசி போட்டியில், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவமாடினார். 37 பந்துகளில் சதம் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட செய்தார். அதன் விளைவாக இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ


இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். காரணம் களத்தில் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் எதிர்பார்த்த முடிவுகளை கொடுத்தன. அதேநேரம், பேட்ஸ்மேன் ஆக இந்த தொடர், சூர்யகுமார் யாதவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் முறையே, 0,12,14,0,2 என மிக மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். அதாவது 5 போட்டிகளில் சேர்த்து 28 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசியுள்ளார். இதனால், ஒரு பேட்ஸ்மேன் ஆக சூர்யகுமார் யாதவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.


கம்பேக் கொடுப்பாரா ரோகித்?


பேட்டிங்கில் சொதப்பினாலும், கேப்டன்ஷியில் அசத்தியதால் சூர்யகுமார் யாதவ் மீதான விமர்சனங்கள் குறைவாக உள்ளன. இந்நிலையில் தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார். கடந்த சில காலங்களாகவே மோசமான ஃபார்மில் உள்ள ரோகித், இந்த தொடர் மூலம் கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


உள்ளூரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மற்றும் அண்மையில் களமிறங்கிய ரஞ்சிபோட்டியில் கூட ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை. பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி, கேப்டனாக கூட அணியை திறம்பட கையாளவில்லை என விமர்சனங்கள் குவிகின்றன.


சாதிப்பாரா ரோகித் சர்மா?


நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தியாவின் தோல்விகளுக்கு, ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் மிக முக்கிய காரணமாகும். அவரது பேட்டிங்கை இந்திய அணி எவ்வளவு சார்ந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இந்நிலையில் தான் வரும் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது. இதன் மூலம் வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். பேட்டிங்கில் சொதப்பினாலும், சூர்யகுமார் யாதவை போன்று கேப்டன்ஷியில் ஆவாது அணிக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  ஒருவேளை தவறினால், இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடும், கடைசி ஐசிசி தொடராகவும் சாம்பியன்ஸ் ட்ராபி இருக்கலாம்.