இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. 35 வயதான சுரேஷ் ரெய்னா கடந்த 2020, ஆகஸ்டு 15ந் தேதி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஓரங்கட்டப்பட்டு, கடந்த ஆண்டு எந்த அணியாலும் ரெய்னா ஏலம் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுரேஷ் ரெய்னா, அவ்வபோது இந்திய அணி மற்றும் அணி வீரர்களை பாரட்டியும் உற்சாகப்படுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி. கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ அன்பான கிரிக்கெட் வீரர் திரு. சுரேஷ் ரெய்னா ஆகஸ்ட் 5, 2022 அன்று பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 12வது ஆண்டு பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதியாக வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு கௌரவ விருது பெறுவார்” என்று பதிவிட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னா இதுவரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகளில் விளையாடி 768 ரன்களும், 226 ஒருநாள் போடிகளின் விளையாடி 5,615 ரன்களும், 78 டி20 ஆட்டங்களில் விளையாடி 1,605 ரன்களும் எடுத்துள்ளார். ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 32.52 சராசரியில் 5528 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கணக்கில் ஒரு சதம் மற்றும் 39 அரைசதங்கள் உள்ளன. இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 சீசன்களில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் 4 சாதனைகள் :
- ஐபிஎல்லில் 5000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன்
- ஐபிஎல்லில் அதிக கேட்ச்
- சிஎஸ்கே அணிக்காக அதிக அரைசதங்கள்
- சிஎஸ்கே அணிக்காக அதிக பவுண்டரிகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்