இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. அதன்பின்னர் இந்திய அணி ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அத்துடன் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் அதன்பின்னர் இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. இரண்டாவது டி20 போட்டி செப்டம்பர் 23ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. அதன்பின்னர் இரண்டாவது போட்டி அக்டோபர் 2ஆம் தேதியும், மூன்றாவது போட்டி அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. டி20 தொடருக்கு பின்பு அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடர் அக்டோபர் 11ஆம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு செல்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி இரண்டு முக்கியமான தொடர்களில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்