இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்திருந்த சாதனையை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.


இங்கிலாந்து அணி வெற்றி:


ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகித்து வரும் நிலையில், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று அசத்தியது. இந்த போட்டியில் வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வைத்திருந்த சாதனையை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனதாக்கியுள்ளார்.


ஸ்டோக்ஸ் படைத்த சாதனை:


மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்த்ரேலிய அணி நிர்ணயித்த, 251 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை, அதிகமுறை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியின் கேப்டன் என்ற பெருமையை ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார். அதுவும், இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே, 277,299, 296 மற்றும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 378 ரன்கள் என்ற இமாலய இலக்கையும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி எட்டிப் பிடித்தது. 


 தோனி சாதனை:


முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான், டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக நான்குமுறை 250-க்கும் அதிகமான இலக்கை எட்டிய அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை வகித்து வந்தார். அந்த சாதனையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார். தோனி 60 போட்டிகளில் படைத்த சாதனையை, ஸ்டோக்ஸ் வெறும் 17 போட்டிகளில் தகர்த்துள்ளார். இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.


மாற்றம் கண்ட இங்கிலாந்து:


பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், மெக்கல்லம் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்ற பிறகு அந்த அணி முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் டிரா என்பது இலக்கு கிடையாது,  வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு என்ற எண்ணத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், ஜோ ரூட் போன்ற விரர்கள் கூட டெஸ்ட் போட்டியில் அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். பேஸ்பால் கிரிக்கெட் எனும் இவர்கள் பின்பற்றும் முறை, ஆபத்தானதாக இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.