ரிஷப் பண்டின் தலைப்பகுதியில் 2 வெட்டுகளும், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளதாகவும் பி.சி.சி.ஐ. தகவல் வெளியிட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய ரிஷப்பண்ட்:
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தானது உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் இன்று காலை நடந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கிய ரிஷப்பை மீட்டு, 108க்கு போன் செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ரிஷப் பண்ட் டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னதாக ரிஷப் பண்ட்டின் தற்போதைய நிலை குறித்து பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் பண்டின் தலைப்பகுதியில் 2 வெட்டுகளும், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், “ரிஷப் பண்ட்டின் வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரல் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், முதுகுப் பகுதியிலும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது” என பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது, எங்கு நடந்தது? எப்படி உயிர் பிழைத்தேன் என்று ரிஷப் பண்ட் முன்னதாகத் தெரிவித்திருந்தார். பண்ட் மட்டும் காரிலிருந்து இறங்க சிறிது நேரம் ஆகியிருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். ஏனெனில் இந்தச் சம்பவத்திற்கு பிறகு காரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, முற்றிலும் கார் எரிந்து போனது.
தீவிர சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்த ரிஷப் பண்ட், இந்த விபத்து எப்படி நடந்தது என்று காவல்துறையிடம் தெரிவித்தார். அதில், ”நான் தான் காரை ஓட்டி வந்தேன். வாகனம் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக கண் அசந்துவிட்டேன். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள டிவைடரில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு பிறகு, காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்தேன். நான் வெளியே வந்த சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது” என தெரிவித்தார்.