SL Vs Nz 3rd T20: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இலங்கை வீரர் குசால் பெரேரா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
தொடரை இழந்த இலங்கை அணி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தடுமாறிய இலங்கை
இதையடுத்து ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. நிசாங்கா, குசால் மென்டிஸ் மற்றும் ஃபெர்னாண்டோ ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 83 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பெரேரா ருத்ரதாண்டவம்:
ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் குசால் பெரேரா நிலைத்து நின்று அதிரடி காட்டினார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல், நியூசிலாந்து அணி திணறியது. இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 46 பந்துகளை எதிர்கொண்ட பெரேரா, 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை வீரர் ஒருவர் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். மேலும், இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெரேரா பெற்றுள்ளார். முன்னதாக, 2010ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஜெயவர்தனேவும், 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தில்ஷனும் இலங்கை அணிக்காக சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அசலங்கா அதிரடி
இதனிடயே, பெரேராவிற்கு ஆதரவாக மறுமுனையில் அசலங்காவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்சர்கள் மூலம் எதிரணிகளை திணறடித்தார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 46 ரன்களை விளாசினார். இறுதியில் கடைசி நேரத்தில் இவரும் ஆட்டமிழந்தால், அணியின் ஸ்கோர் உயரும் வேகம் குறைந்தது.
219 ரன்கள் இலக்கு
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக, மேட் ஹென்றி, ஜேகப் டூஃபி, ஜகாரி ஃபோல்க்ஸ், சாண்ட்னர் மற்றும் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனைதொடர்ந்து, 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.