மும்பையில் கடந்த வியாழக்கிழமை இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக, பேட்டிங் செய்ய உள்ளே வந்த இலங்கை அணி 55 ரன்களுக்குள் சுருண்டது. 2023ம் ஆண்டு மட்டும் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இரட்டை இலக்க ஸ்கோரில் மூன்றாவது முறையாக ஆட்டமிழந்தது. 


தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா என விளையாடிய 7 போட்டிகளில் 5ல் தோல்வியை சந்தித்தது. இலங்கை அணி நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தை மட்டுமே வீழ்த்தியுள்ளது. 


இலங்கை அணி அடுத்ததாக வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக எதிராக விளையாடவுள்ளது. இந்தநிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற, உலகக் கோப்பையில் முதல் எட்டு இடங்களுக்குள் வர வேண்டுமானால் இலங்கை மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றிபெறுவது அவசியம். 


இந்த சூழலில், இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய தோல்வியால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பறிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு பிறகு, இலங்கை கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களிடமிருந்து அவசர மற்றும் விரிவான விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளது. 






இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இலங்கை கிரிக்கெட் (SLC) நடப்பு உலகக் கோப்பை 2023 இன் போது இலங்கை தேசிய அணியின் செயல்திறன் குறித்து ஆழ்ந்த கவலையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கவலைகளை போக்குவகையிலும், அதற்கு தீர்வு காணும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவசர மற்றும் வீரர்கள், முழு பயிற்சி ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்களிடமிருந்து விரிவான விளக்கம் வேண்டும். ” என தெரிவித்திருந்தது. 


மேலும், “ இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பகுதிகளை அடையாளம் காணவும், எதிர்கால போட்டிகளில் அதிக போட்டித்தன்மையை உறுதிப்படுத்தவும் ஒரு ஆக்கபூர்வமான உரையாடலைத் திறப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.” என தெரிவித்துள்ளது. 


காயத்தால் தடுமாறுகிறதா இலங்கை..?


உலகக் கோப்பை தொடங்கியது முதலே இலங்கை அணி காயத்தால் தடுமாறி வருகிறது. இலங்கை கேப்டன் தசுன் ஷனக, வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷ பத்திரன மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயத்தால் விலகினர். அவர்களுக்குப் பதிலாக சாமிக்க கருணாரத்ன , ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் குசல் மெண்டிஸ் கேப்டனாக களமிறக்கப்பட்டார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இலங்கை அணியில் முக்கிய சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா காயத்தால் விலகினார். 


இலங்கையின் அடுத்த ஆட்டம் நவம்பர் 6-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டம் நவம்பர் 9-ம் தேதி பெங்களூருவில் நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது.