இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த தொடரில் இலங்கை சிறப்பாக செயல்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தற்காலிக தலைமை பயிற்சியாளரான ஜெயசூர்யாவை தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது இலங்கை அணி. அதேபோல், டி20 உலகக் கோப்பையிலும் சொதப்பிய அந்த அணி கத்துக்குட்டி அணிகளிடம் எல்லாம் தோல்வி அடைந்தது.


வின்டேஜ் மோடுக்கு திரும்புமா இலங்கை அணி? 


ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் எதிரணியை மிரட்டிய இலங்கை அணி கடந்த காலங்களாக மோசமாக விளையாடி வருவது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சூழலில், டி20 உலக கோப்பையில் இலங்கை தோல்வியை தழுவிய பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்தார்.


இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இதில், டி20 தொடரில் இந்தியா வெற்றி அடைந்திருந்தாலும் ஒரு நாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.


அதுமட்டும் இன்றி, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியிலும் இலங்கை அணி சிறப்பாக விளையாடி இருந்தது. இதற்கு, தற்காலிக தலைமை பயற்சியாளரான ஜெயசூர்யாவே காரணம் என சொல்லப்பட்டது.


 






இந்த நிலையில், தற்காலிக தலைமை பயிற்சியாளரான ஜெயசூர்யாவை தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வரும் 2026ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி வரை, அவர் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.