நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பல்வேறு அணிகளும் இனவெறி தாக்குதலுக்கு எதிரான தங்களுடைய குரலை கொடுத்து வருகிறது. அந்தவகையில் கால்பந்து போட்டி ஒன்றில் தொடங்கப்பட்ட பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற ஒரு காலை மண்டியிட்டு வெளியிடும் ஆதரவு செயலை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை  உள்ளிட்ட அணிகள் செய்து வருகின்றன. தென்னாப்பிரிக்க அணி சார்பில் இன்றைய போட்டிக்கு முன்பாக அனைத்து வீரர்களும் இதேபோல் மண்டியிட்டு பிளாக் லைவஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டது. 


இந்நிலையில் அந்த அறிவிப்பை தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் குயிண்டன் டி காக் ஏற்க மறுத்துள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து போட்டிக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அவர் விலகியது தொடர்பாக அணி நிர்வாகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இன்றைய போட்டிக்கு முன்பாக அனைத்து வீரர்களும் ஒற்றுமையாக ஒரே மாதிரி மண்டியிட்டு இன்வெறி தாக்குதலுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.






ஆனால் இதை ஏற்க மறுத்த டிகாக் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் எப்போதும் வீரர்களின் தனிப்பட்ட கருத்தை மதிக்கும். ஆனால் இனவெறி தாக்குதலுக்கு எதிராக மொத்த அணியும் ஒற்றுமையாக இருந்து ஒரே குரலில் செயல்பட வேண்டும். தற்போது அதை டிகாக் செய்யவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் எப்போதும் இனவெறி தாக்குதலை ஏற்று கொள்ளாது. அதில் அனைத்து வீரர்களும் உறுதியாக இருக்க வேண்டும் " எனக் கூறியுள்ளது. 




இந்தச் சூழலில் டிகாக் விலகியது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக ஒருவர் டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகுவது எப்படி ஏற்புடையது. அதுவும் ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா மாதிரியான அணி மீது ஏற்கெனவே இனவெறி தாக்குதல் தொடர்பாக புகார் உள்ள நிலையில் இப்படி அவர் செய்துள்ளது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று பலர் கூறி வருகின்றனர். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர்கள் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து மண்டியிட்டும், கையை தூக்கியும் இருந்தனர். ஆனால் அப்போது டிகாக் மட்டும் எதுவும் செய்யாமல் இருந்தார். தற்போது பலரும் அந்தப் படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் படிக்க: என்சிஏ குழுவே இந்திய அணியின் பயிற்சியாளர்களாக வருகிறதா?- காரணம் என்ன?