இந்திய அணியை தொடர்ந்து ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு டெம்பா பவுமாவே தலைமை தாங்குகிறார்.
உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று மதியம் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரால் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது தென்னாப்பிரிக்காவும் தனது அணியை அறிவித்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த மிகப்பெரிய போட்டிக்கு தயாராகும் வகையில், தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்கா எப்போது? யாருடன் முதல் போட்டியில் விளையாடுகிறது..?
உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை அக்டோபர் 7ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதற்கு முன், அந்த அணி செப்டம்பர் 29 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், அக்டோபர் 2 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக இருந்த டெம்பா பவுமாவே, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்த இருக்கிறார்.
ஜெரால்ட் கோட்ஸிக்கு கிடைத்த வாய்ப்பு:
தென்னாப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி இந்த ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார், இப்போது உலக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கோட்ஸி இதுவரை தென்னாப்பிரிக்காவுக்காக 2 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
முற்றிலும் அனுபவம் இல்லாத ஒருவரை தென்னாப்பிரிக்கா அணி எடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, அனுபவமிக்க பேட்ஸ்மேன்களான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டா காக், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டுசென் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் அசத்த லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மாகலா, கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்வான்சி