மகளிர் உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் உடல்நலக்குறைவு காரணமாக விலகிய நிலையில், மாற்று வீராங்கனையாக ஸ்னே ரானா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உடன் இன்று மாலை அரையிறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், இந்திய அணியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.


பூஜா வஸ்த்ரகர் விலகல்:


தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பி பிவில் இடம்பெற்றுள்ள இந்திய, 3 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இன்று களமிறங்க உள்ளது. இந்நிலையில், ஆல்ரவுண்டர் பூஜா வஸ்த்ரகர் இந்திய அணியில் இருந்து உடல்நலக்குறைவு காரணமாக விலகியுள்ளார். கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்னே ரானாவிற்கு வாய்ப்பு:


பூஜா வஸ்த்ரகருக்கு மாற்றாக இந்திய அணியில், ஸ்னே ரானா சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான இவர் இதுவரை 24 டி-போட்டிகள் உட்பட 47 சர்வதேச போட்டிகளில் ஸ்னே இந்திய அணிக்காக  விளையாடியுள்ளார். பூஜாவிற்கு பதிலாக ரானாவை இந்திய அணியில் சேர்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமுன் ஒப்புதல் அளித்துள்ளது. மேல் சுவாசக்குழாய் தொற்று காரணமாக பூஜா வஸ்த்ரகர் அணியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்ற அவர், புதிய பந்தில் ரேணுகா தாகூருடன் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அளித்தார்.


இதையடுத்து இன்றைய அரையிறுதிப்போட்டியில், ரானா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தென்னாப்ரிக்காவிற்கு எதிராக இந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு தொடரில், இந்திய அணிக்காக விளையாடிய ரானா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.


ஹர்மன் பிரீத்திற்கு என்னாச்சு?


இதனிடையே, இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்றைய அரையிறுதிப்போட்டியில் விளையாடுவாரா, இல்லையா என்பது டாஸிற்கு முன்பாக முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் போட்டியில் இருந்து விலகினால், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்துவார். ஒருவேளை ஹர்மன் பிரீத் இன்றைய போட்டியில் விளையாடாவிட்டால், அது இந்திய அணிக்கு பின்னடைவாகவே அமையும். 


அரையிறுதிப்போட்டி:


மகளிர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.