ICC WC 2023 SL Vs Pak: 13வது உலகக் கோப்பை 2023 தொடர் மிகவும் கோலாகலமாக இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த தொடரில் களமிறங்கியுள்ள அனைத்து அணிகளும் குறைந்த பட்சம் தலா ஒரு போட்டியை விளையாடி புள்ளிப்பட்டியலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள தொடங்கிவிட்டன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றது. 


இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இலங்கை மற்றும் பாகீஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் சேர்த்தது.  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. இலங்கை தரப்பில் மென்டிஸ் 122 ரன்களும், சமரவிக்ரம 108 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 10 ஓவர்கள் வீசி 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.


அதன் பின்னர் 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலககுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டினை 12 ரன்களிலும், அதன் பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னிலும் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் பாகிஸ்தானின் நம்பிக்கையாக உள்ள ரிஸ்வான் தொடக்க வீரர் அப்துல்லாவுடன் இணைந்து சரிவில் இருந்த பாகிஸ்தானை மீட்டனர். இவர்களின் கூட்டணியை பிரிக்க இலங்கை கேப்டன் ஷனக எடுத்த முடிவுகள் அனைத்தும் வீணாகப் போனது. 


இருவரும் நிலைத்து நின்று ரன்கள் குவிக்க ஆரம்பித்தனர். இவர்கள் எடுத்த ரன்கள் மட்டும் இல்லாமல் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் வைய்டு மற்றும் அதைத்தொடர்ந்து எக்ஸ்ட்ராஸ்களை வாரி வழங்கினர். சிறப்பாக ரன்கள் குவித்த அப்துல்லா சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார். உலகக் கோப்பைத் தொடரில் இந்த போட்டிதான் இவருடைய அறிமுகப் போட்டி ஆகும். அதன்பின்னர் தனது விக்கெட்டினை அப்துல்லா இழக்க, அதன் பின்னரும் சிறப்பாக விளையாடி வந்த ரிஸ்வான் சதம் விளாசி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். 


இறுதியில் பாகிஸ்தான் அணி  48.2  ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிரான அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. அதேபோல் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இலங்கை அணியின் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பத்திரானா. இவர் மட்டும் வைய்டு மூலம் 18 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். அதேபோல் தீக்‌ஷனா 5 ரன்கள் வைய்டு மூலம் விட்டுக்கொடுத்தார்.