SL vs IND 3rd T20I: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற உள்ளது.


தொடரை கைப்பற்றிய இந்திய அணி:


புதியதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. புதிய பயிற்சியாளர் கம்பீரின் கீழ் இந்திய அணியின் செயல்பாட்டை காண, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல், ஏற்கனவே இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது.


ஒயிட்-வாஷ் செய்யுமா இந்திய அணி?


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்திய அணி, மூன்றாவது போட்டியிலும் வென்று, சொந்த மண்ணில் இலங்கையை ஒயிட்-வாஷ் செய்ய  தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், உள்ளூர் ரசிகர்கள் முன்பு ஒயிட்-வாஷ் ஆவதை தவிர்க்க, ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணி இன்று களமிறங்கிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் சோனி லைவ் அலைவரிசையிலும், ஒடிடியில் சோனிலைவ் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


இந்திய அணியின் பலம், பலவீனங்கள்:


இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் களமிறங்காத சுப்மன் கின் இன்று விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரரான யஷஷ்வி ஜெய்ஷ்வால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி உள்ளது. நியான் பராக் ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். பந்துவீச்சை பொறுத்தவரையில், அர்ஷ்தீப் சிங் நம்பிக்கை அளிக்கிறார். கலீல் அகமது மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். புதியதாக எந்த தவறுகளும் செய்யாலம், கடந்த இரண்டு போட்டிகளை போன்று குழுவாக செயல்பட்டாலே, இன்றைய போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெறலாம்.


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்தியா 21 முறையும், இலங்கை 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.


பல்லேகல மைதானம் எப்படி?


முந்தைய இரண்டு போட்டிகளிலும் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதால், இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் வேரியேஷன்களை பரிசோதிக்க போதுமான வாய்ப்புகள் இருக்கும். முந்தைய இரண்டு போட்டிகளும் அதிக ஸ்கோரைப் பெற்ற போட்டிகளாக இருந்ததால், இந்த இறுதி ஆட்டமும் இதே போக்கைப் பின்பற்றும். 


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா: சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (கே), சஞ்சு சாம்சன் (வி.கே), ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது


இலங்கை: அவிஷ்க பெர்னாண்டோ, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (wk), தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, ரமேஷ் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ