SL vs BAN Innings Highlights: உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 279 ரன்களை சேர்த்தது.


இலங்கை - வங்கதேசம் மோதல்:


உலகக் கோப்பையின் 38வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 7 லீக் போட்டிகளில் வங்கதேச அணி 2 வெற்றியும், இலங்கை அண் ஒரு வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.


ஆரம்பமே அதிர்ச்சி:


இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான குசல் பெரேரா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் குசால் பெரேரா 19 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து நிசாங்கா 41 ரன்களுக்கு நடையை கட்டினார்.


நம்பிக்கை தந்த பார்ட்னர்ஷிப்:


இதையடுத்து நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அசலங்கா மற்றும் சமரவிக்ரமா பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த கூட்டணி 4வது விக்கெட்டிற்கு 63 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 41 ரன்கள் சேர்த்து இருந்தபோது, சமரவிக்ரமா ஆட்டமிழந்தார்.


சர்ச்சையை ஏற்படுத்திய விக்கெட்: 


உலகக் கோப்பையில் விக்கெட் விழுந்த பிறகு புதியதாக களமிறங்கும் அல்லது ஏற்கனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். தவறினால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படும். அந்த வகையில் சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது தான் அணிந்து வந்த ஹெல்மெட் சரியில்லாததை உணர்ந்து, ஹெல்மெட்டை மாற்ற முயன்றார். ஆனால், கிரீஸிற்கு வர மேத்யூஸ் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதாக வங்கதேச வீரர்கள் முறையிட, அவர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


அசலங்கா அபாரம்:


இதையடுத்து வந்த சில்வாவும் அசலங்காவுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சீரான இடைவெளியில் பவுண்டரி பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசிய அசலங்கா, ஒருநாள் போட்டிகளில் தனது மற்றொரு அரைசத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்த தீக்‌ஷனா 22 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் தொடர்ந்து அபாரமாக விளையாடிய அசலங்கா 101 பந்துகளில், தனது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து 108 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.


வங்கதேச அணிக்கு ரன்கள் இலக்கு:


இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை சேர்த்தது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும்,  கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த இலக்கை வங்கதேச அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.