SL vs AFG Innings Highlights: உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 241 ரன்களை சேர்த்தது.


இலங்கை அணி பேட்டிங்:


உலகக் கோப்பையின் 30வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில்  ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


தடுமாறிய இலங்கை:


பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.  தொடக்க ஆட்டக்காரரான கருணரத்னே வெறும் 15 ரன்களில் நடையை கட்டினார். அதேநேரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 46 ரன்கள் சேர்த்து இருந்த போது ஒமர்சாய் பந்துவீச்சில் நடையை கட்டினார். 


பந்துவீச்சில் மிரட்டிய ஆப்கானிஸ்தான்:


இதையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி, சமரவிக்ரமா 36 ரன்கள், டி சில்வா 14 ரன்கள், அசலன்கா 22 ரன்கள் மற்றும் சமீரா ஒரு ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். ஓரளவு தாக்குபிடித்த மெண்டிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், அதிரடியாக ரன் சேர்க்க முடியால் இலங்கை அணி திணறியது. இந்த நேரத்தில் ரன்களை எளிதில் விட்டுக் கொடுக்காமல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 


கடைசியில் இலங்கைக்கு வந்த நம்பிக்கை:


இதனால் ஒரு கட்டத்தில் 185 ரன்களை சேர்ப்பதற்குள் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தீக்‌ஷனா அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இதனால் இலங்கையின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.  31 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 29 ரன்களை சேர்த்த போது, ஃபரூக்கி பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.


இலங்கை அணி ஆல்-அவுட்


அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அனுபவம் வாய்ந்த வீரரான மேத்யூஸ், சற்றே பொறுப்புடன் விளையாடி இறுதி கட்டத்தில் 23 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து ரஜிதா 5 ரன்கள் சேர்த்து இருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். தொடர்ந்து 242 ரன்கள் என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் அணி எட்டுமா என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்.