இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க் ஆட்டக்காரர் பதும் நிஷங்கா இரட்டைச் சதம் விளாசி அசத்தியுள்ளார். அவர் வெறும் 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டரி 8 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 210 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 210 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இலங்கை அணியின் ஜெய்சூர்யாவின் சாதனையாக இருந்த 189 ரன்களைக் கடந்துள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது.
இந்த இரட்டைச் சதம் மூலம் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார் நிஷன்கா.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான் அணி, இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளது. அதில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதற்கடுத்து இன்று அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகேலே சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
இலங்கை அணியின் இன்னிங்ஸை வழக்கம்போல், பதும் நிஷன்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் தொடங்கினர். இருவரும் தொடக்கம் முதல் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விளாசி வந்தனர். இவர்களின் ஆட்டத்தினை தடுக்க ஆஃப்கானிஸ்தான் அணி தன்னிடம் இருந்த அனைத்து பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் ஸ்கோர் 182 ரன்களாக இருந்தபோது முதல் விக்கெட்டை இலங்கை அணி இழந்தது. ஃபெர்னாண்டோ 88 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 88 ரன்களில் தனது விக்கெட்டினை ஃபரீத் அகமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த குஷால் மெண்டிஸ் தனது விக்கெட்டினை 31 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதற்குள் நிஷாங்கா தனது சதத்தினை பூர்த்தி செய்து மேற்கொண்டு சிறப்பாக விளையாடி வந்தார். அணியின் ஸ்கோர் 32 ஓவர்களில் 202 ரன்களில் இருந்தபோது பதும் நிஷன்கா 88 பந்தில் தனது சதத்தினை பூர்த்தி செய்தார்.
அதன் பின்னர் 136 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பவுண்டரி அடித்து பூர்த்தி செய்தார். அதாவது அடுத்த 48 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை எட்டியுள்ளார். இறுதிவரை களத்தில் இருந்த பதும் நிஷன்கா 139 பந்துகளில் 210 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.