இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ் கோட்டில் தொடங்கவுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்?
இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வரும் 15ஆம் தேதி ராஜ் கோட்டில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணத்தால் விளையாடமாட்டார் என்ற தகவல் ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருந்தோ, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் தரப்பில் இருந்தோ எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் காயத்தின் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத காரணத்தால் அவர் அடுத்த போட்டியில் மட்டும் விளையாட மாட்டாரா? அல்லது அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டாரா எனவும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
மூன்றாவது டெஸ்ட்டில் எப்படி?
முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி இரண்டாவது போட்டியிலும் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் சீனியர் வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி தோல்வியைச் சந்திக்கும் என உலக கிரிக்கெட் அரங்கில் பேசப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இளம் இந்திய அணியை வைத்து பலமான இங்கிலாந்து அணியை அடித்து துவம்சம் செய்தது.
இந்நிலையில் இந்திய அணி வரும் 15ஆம் தேதி சீனியர் வீரர்கள் இல்லாமல் பலமான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளப்போகின்றதா அல்லது அதற்குள் அனைவரும் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த இரண்டு போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் எப்படி?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் மொத்தம் 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 48 ரன்களும், இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 56 ரன்களும் சேர்த்துள்ளார்.
அடுத்துள்ள போட்டிகள் எப்போது? எங்கு?
மூன்றாவது டெஸ்ட் போட்டி - பிப்ரவரி 15 முதல் 19 ராஜ் கோட்டில் உள்ள சவ்ராஸ்ட்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நான்காவது டெஸ்ட் போட்டி - பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை ராஞ்சியில் உள்ள ஜெஎஸ்சிஏ சர்வதேச மைதானம்
ஐந்தாவது டெஸ்ட் போட்டி - பிப்ரவை 07 முதல் பிப்ரவரி 11 வரை தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.