SL vs AFG 1st ODI: இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. 


ஆப்கான் அசத்தல் பேட்டிங்:


டி20 உலக்கோப்பைக்குப் பிறகு ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் நேற்று நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 


டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, களம் இறங்கியது. ஆரம்பம் முதலே ஆஃப்கானிஸ்தான் அணி மிகவும் நிதானமான நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தது. முதலில் களம் இறங்கிய குர்பாஸ் மற்றும் இப்ராகிம் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர், களம் இறங்கிய வீரர்கள் அவரவர் பங்கிற்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தனர்.


சதம்:


தொடக்க வீரராக களம் இறங்கிய இப்ராகிம் ஜட்ரான் 120 பந்துகளில் 14 ஃபோர் உட்பட 106 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்திருந்தது. அந்த அணியின் சார்பில் குர்பாஸ், ரஹ்மாட் ஆகியோர் அரைசதம் விளாசினர். நாஜிபுல்லா 25 பந்தில் 5 ஃபோர், ஒரு சிக்ஸற் என 42 ரன்கள் விளாசியிருந்தார். 






295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு சரியான மற்றும் நிலையான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. தொடக்கம் முதலே விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. அதிகபட்சமாக இலங்கை அணியின் சார்பில் தொடக்க வீரராக களம் இறங்கிய பதும் நிஷ்கன்னா 83 பந்தில் 10 ஃபோர் அடித்து 85 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.


ஹசரங்கா போராட்டம் வீண்:


ஹரசங்கா 46 பந்தில் 5 ஃபோர் 2 சிக்ஸர் என 66 ரன்கள் விளாசியிருந்தார்.  மற்றபடி அந்த அணியில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் 50 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் 38 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியின் சார்பில் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளும், குல்பாடியன் நைப் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். 


உலககோப்பையில் பங்கேற்க சிக்கல்:


இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி 62 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. ஆனால் முதல் 8 அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என்பதால் இலங்கை தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 110 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.