இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.


இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


ஒன்றரை நாட்களில் முடிந்து விடும்:


இதனிடையே, கடந்த 2022 ஆம் ஆண்டில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது போல் இந்த முறை இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் சூளுரைத்து வருகின்றனர். இச்சூழலில் இங்கிலாந்து அணி பாஸ்பால் முறையை கையாண்டால் போட்டி ஒன்று அல்லது ஒன்றரை நாட்களில் முடிந்துவிடலாம் என்று இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசியுள்ள முகமது சிராஜ், “இங்கிலாந்து பாஸ்பால் முறையை கையாண்டால் போட்டி ஒன்று அல்லது ஒன்றரை நாட்களில் முடிந்து விடலாம். இங்கே அவர்களால் ஒவ்வொரு நேரமும் எளிதாக  அடிக்க முடியாது. ஏனெனில் சில நேரங்களில் இங்கே பந்து திரும்பலாம்சில நேரங்களில் பந்து நேராக செல்லலாம். எனவே இத்தொடரில் பாஸ்பால் ஆட்டத்தை பார்ப்பது கடினம் என்று நினைக்கிறேன். ஒருவேளை இங்கிலாந்து அணி அப்படி விளையாடினால் எங்களுக்கு நல்லது. ஏனெனில் போட்டி மிகவும் விரைவாக முடியும். இந்த தொடரில் புதிய பந்தில் வீசக்கூடிய என்னுடைய லைன் மற்றும் லென்ந்த் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும்.


வெள்ளைப்பந்து போட்டிகளுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் நான் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன். நீங்கள் எப்போதும் 5 – 6 மீட்டர் தொலைவில் வீச வேண்டும். ஏனெனில் புதிய பந்தில் நீங்கள் பிட்ச் அப் செய்தால் உங்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு ஸ்விங் கிடைக்காமல் போனால் லென்த்தில் சற்று மாற்றம் செய்ய வேண்டும். எனவே புதிய பந்தில் நான் ஒரே இடத்தில் தொடர்ந்து வீசுவதற்கு முயற்சிப்பேன். புதிய பந்தாக இருந்தாலும் பழைய பந்தாக இருந்தாலும் அது தான் இத்தொடரில் என்னுடைய கவனமாக இருக்கும்என்று கூறியுள்ளார்.