இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுபமன் கில், அடுத்த 10 ஆண்டுகளில் பல சாதனைகளை படைப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:


சுபமன் கில் 11 டெஸ்ட், 15 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 அரை சதங்களை விளாசியுள்ள சுபமன் கில், பேட்டிங் ஆவரேஜ் 57.25 வைத்துள்ளார். சுபமன் மிகவும் கடினமான உழைப்பாளி. அவர் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்து வருகிறார். அடுத்த 10 ஆண்டுகளில் அவர் சிறப்பான சாதனைகளைப் படைப்பார் என்று நம்புகிறேன்.


2023 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அவர் சிறப்பான பங்களிப்பை செய்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் யுவராஜ் சிங். நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்த சுபமன் கில், சிறப்பாக விளையாடினார்.






இதனிடையே, சுபமன் கில் சதம் அடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.


சுபமன் கில் 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமானால் அவர் ஆட்டத்தில் எடுக்கும் 50, 60 ரன்களை சதமாக மாற்ற வேண்டும். அவரிடம் சிறப்பான திறமை ஒளிந்திருக்கிறது. அவரிடம் அரிய பேட்டிங் ஸ்டைல் உள்ளது. ஆனால், தனது திறமைக்கு அவர் நியாயம் சேர்க்க மறுக்கிறார் என்றார் சுனில் கவாஸ்கர்.