சீனியர் பெண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது டெல்லியில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் வருகிற டிசம்பர் 9 ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.


இந்தநிலையில், இந்த சர்வதேச தொடருக்கு முன்னதாக, ரமேஷ் பவாருக்கு பதிலாக, ஹிருஷிகேஷ் கனிட்கர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


யார் இந்த ஹிருஷிகேஷ் கனிட்கர்..? 


 1997 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான கனிட்கர், 2000 ஆம் ஆண்டு வரை 34 போட்டிகளில் விளையாடி 339 ரன்கள் எடுத்தார். அவர் தனது சர்வதேச அளவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 74 ரன்கள் எடுத்தார். அதேபோல், கனிட்கர் முதல் தர போட்டிகளில் 10,000  ரன்களை எடுத்துள்ளார்.


2011 ஆம் ஆண்டு தொடங்கி, கனிட்கர் விளையாட்டின் பல்வேறு நிலைகளில் பல அணிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய U-19 அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும், கோவா மற்றும் தமிழ்நாடு ரஞ்சி அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். சமீபத்திய நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு பயிற்சி அளித்த விவிஎஸ் லக்ஷ்மனின் கீழ் பயிற்சியாளர் குழுவில் ஒரு அங்கமாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்து பேசிய கனிட்கர், “சீனியர் மகளிர் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது எனக்கு மரியாதைக்குரியது. இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக எண்ணுகிறேன். மேலும் எங்கள் அணியில் இளைஞர்கள் மற்றும் அனுபவம் கலந்த நல்ல கலவை உள்ளது. வரவிருக்கும் சவாலுக்கு அணி தயாராக உள்ளது. எங்களிடம் சில மார்கியூ நிகழ்வுகள் வரவுள்ளன, இது அணிக்கும் எனக்கும் பேட்டிங் பயிற்சியாளராக உற்சாகமாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார். 


இதற்கிடையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார், விவிஎஸ் லக்ஷ்மனின் கீழ் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) இணைய இருக்கிறார். அதேபோல், ரமேஷ் பவார் மேலும் ஆண்கள் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு, VVS லக்ஷ்மன் NCA யில் தலைவராக இணைய தனது பதவியை ராஜினாமா செய்தார், இதையடுத்து, பவார் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.


தொடர்ச்சியாக, லக்ஷ்மண் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவார் இணைக்கப்பட்டது குறித்து பேசினார். அப்போது அவர், "ரமேஷ் பவார் தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு கொண்டு வருவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உள்நாட்டு, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் மற்றும் சர்வதேச சுற்றுகளில் ஏற்கனவே பணியாற்றியதால், நான் திறமை குறித்து உறுதியாக நம்புகிறேன். விளையாட்டின் முன்னேற்றத்தில் அவர் ஒரு தீவிரமான பங்கை வகிப்பார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவாரின் புதிய பாத்திரத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்." என தெரிவித்தார்.