பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs இங்கிலாந்து தொடரின் முதல் டெஸ்ட் நாளை ஜூன் 20 அன்று தொடங்குகிறது, இந்த போட்டிக்கு முன்னதாக, இந்தியாவின் புதிய டெஸ்ர் கேப்டன் ஷுப்மான் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது களத்திற்கு செல்லும் போது பேட்ஸ்மேனாக செல்லுவேன் என்றும் பேசியுள்ளார்.
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வதன் மதிப்பையும் ஐபிஎல் கோப்பையை வெல்வதன் மதிப்பையும் ஒப்பிட்டு அவர் கூறிய கருத்துக்கள் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டில் நாளை ஹெடிங்லே மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டனான கில் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ள முதல் போட்டி இதுவாகும். 25 வயதே ஆன நிலையில் அவரிடம் கேப்டன் பதவி வழங்கப்பட்டதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பல முன்னாள் வீரர்கள் எதிர்மறையான கருத்துகளை கூறி வருகின்றனர். இதனால், பல்வேறு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் கில் இருக்கிறார்.
ஐபிஎல் பெருசா இல்லா இங்கிலாந்து தொடர் பெருசா
தொடருக்கு முந்தைய நாள் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஷுப்மான் கில் எந்த சாதனையை பெரியதாக கருதுவார் என்று கேட்கப்பட்டது - ஐபிஎல் வெற்றி அல்லது இந்தியாவை இங்கிலாந்தில் தொடர் வெற்றிக்கு அழைத்து செல்வதா என்று இருந்தது.
இதற்கு பதிலளித்த கில் "என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்தில் தொடரை வெல்வதுதான் மிகப்பெரிய விஷயம். உங்கள் தலைமுறையில் சிறந்தவராக இல்லாவிட்டால், இங்கிலாந்துக்கு கேப்டனாக வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் நடக்கும், எனவே சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வது ஒரு பெரிய விஷயம்."
கேப்டன்சி குறித்து கில்:
இந்திய அணியை இவ்வளவு இளம் வயதில் வழிநடத்துவது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது "ஆம், நிச்சயமாக. இது எந்த வீரருக்கும் கிடைக்கும் மிகப்பெரிய மரியாதை. டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்கள் நாட்டை வழிநடத்துவது என்பது மிகச் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. நான் அதைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,".
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பேட்டிங் செய்ய செல்லும்போது நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட விரும்புகிறேன்; கேப்டன் பதவியைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை, அது என் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும், தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன் என்று கில் தெரிவித்தார்.