Shreyas Iyer: நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன ஸ்ரேயாஸ் அய்யர், இந்திய அணிக்குள் வலுவான கம்பேக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் கம்பேக்:

இங்கிலாந்தில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்து, கில் தலைமையிலான அணி அசத்தியது. இதனை தொடர்ந்து இந்திய அணியானது ஆசிய கோப்பையிலும், ஆண்டு இறுதியில் உள்ளூரில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படாலும், பேட்டிங்கில் உள்ள சிலை குறைகளை நிவர்த்தி செய்ய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக நீண்ட நாட்களாக பிசிசியால் ஒதுக்கப்பட்டு வரும் ஸ்ரேயாஸ் அய்யர், இனி மூன்று விதமான போட்டிகளிலும் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயாஸ் தேவையை உணர்ந்த பிசிசிஐ

இந்தியா பட்டம் வென்ற சாம்பியன்ஸ் ட்ராபியில் அணி சார்பில் அதிக ரன் சேர்த்த வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் திகழ்ந்தார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ள இவர், மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்த சூழல் விரைவில் மாற உள்ளதாக கூறப்படுகிறது. பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவ்லின்படி, ஸ்ரேயஸின் அய்யரின் திறனும் அனுபவமும் அணியின் மிடில் ஆர்டருக்கு அனைத்து ஃபார்மெட்களிலும் தேவைப்படுகிறது. இங்கிலாந்து தொடரின் போது அது இல்லாததை நாங்கள் உணர்ந்தோம். அய்யர் சுழற்பந்து வீச்சை திறமையாக எதிர்கொள்ளகூடியவர் என்பது தேர்வுக்குழுவிற்கு தெரியும். இது தென்னாப்ரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் முக்கிய பங்களிக்கும்” என கூறப்படுகிறது.

அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர்:

பிசிசிஐ அறிவுறுத்தலின்படி உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால், சாம்பியன்ஸ் ட்ராபியில் அசத்தினாலும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு பேட்டிங் மட்டுமின்றி தனது தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார். அதேநேரம் அவருக்கு மாற்றாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறக்கப்பட்ட கருண் நாயர் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகிய இருவருமே எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை. இந்நிலையில் தான், ஸ்ரேயஸ் அய்யரை மீண்டும் மூன்று ஃபார்மெட்டிலும் களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறதாம்.

ரிஷப் பண்டின் நிலை என்ன?

காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட், ஆசிய கோப்பையை மட்டுமின்றி மற்றொரு முக்கிய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அதன்படி வெளியாகியுள்ள தகவலில், “மான்செஸ்டர் டெஸ்டில் காலில் காயம் கண்ட ரிஷப் பண்டிற்கு அறுவை சிகிச்சை ஏதும் தேவைப்படவில்லை. ஆனால், குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய கோப்பையுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரையும் தவறவிடுவார்” என கூறப்படுகிறது.