உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 22) தர்மஷாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் 9 பந்துகள் வரை களத்தில் நின்ற டெவோன் கான்வே ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
டைவ் அடித்த ஸ்ரேயாஸ்:
இந்திய பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் வீசிய பந்தில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அந்த கேட்ச்சை ஸ்ரேயாஸ் அவரின் இடது பக்கம் நோக்கி டைவ் செய்து பிடித்தார்.
அப்போது அவர் சிறந்த ஃபீல்டருக்கான விருதை தனக்கு வழங்குமாறு சிக்னல் கொடுக்க அதை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஃபீல்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா:
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதை ஷ்ர்துல் தாக்கூர் வென்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இந்த விருதை பெற்றார். அதேபோல்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலும், வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறந்த ஃபீல்டருக்கான விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் தான் டைவ் அடித்த கேட்ச் பிடித்ததை சுட்டிக்காட்டி ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த ஃபீல்டருக்கான விருதை தனக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த போட்டிகளில் இந்திய அணி சிறப்பான ஃபீல்டிங்கை வெளிபடுத்தியுள்ளது. இந்நிலையில் ஃபீல்டிங்கை தரவரிசையில் இந்திய அணி 91 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து அணியும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் இருக்கிறது. நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணியும், ஐந்தாவது இடத்தில் வங்கதேச அணியும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: nd Vs NZ World Cup 2023: 5வது வெற்றி? புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு? நியூசிலாந்துடன் இன்று மோதும் இந்தியா!
மேலும் படிக்க: IND vs NZ WC Records: 20 வருடங்களாக கிடைக்காத வெற்றி! உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?