இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த 15 ஆண்டுகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது பெயரில் பல்வேறு பெரிய சாதனைகளை குவித்துள்ளார். 


சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலிக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வரை தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், விராட் கோலியை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுள்ளார். தற்போது இந்த பேச்சுதான் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.


விராட் கோலி குறித்து என்ன சொன்னார் சோயப் அக்தர்..?


விராட் கோலி மாஸ்டர்  மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் உயரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளார். சச்சினை போல், தொடர்ந்து நிறைய ரன்களை குவித்து வருகிறார். அடுத்த  6 ஆண்டுகளுக்கு விராட் கோலி கண்டிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நம்புகிறேன். இதனுடன், சர்வதேச கிரிக்கெட்டில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி நிச்சயம் முறியடிப்பார்” என்றார். 






ஆசியக்கோப்பை: 


ஆசியக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் ஹைபிரித் மாடல் முறையில் நடத்தப்பட இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இலங்கை கண்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. 


 அதேபோல், உலகக் கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.


அதிவேக 13 ஆயிரம் ரன்கள்:


ஆசிய கோப்பை தொடரில் கோலி மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடக்க விராட் கோலிக்கு 102 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12, 898 ரன்கள் எடுத்துள்ளார். 


321 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்களை எட்டி தற்போது இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைக்க இருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, ரிக்கி பாண்டிங் மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.